Thursday, March 3, 2011


தமிழ் மொழி


தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...


சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..


சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..


அதட்டும்போது
மட்டும் எ..ஏ...


ஐயத்தின்போது
மட்டும் ஐ...


ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...


வக்கணையின் போது
மட்டும் ஒள...


விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!

தோல்வி சுகமானது


தோல்வி சுகமானது

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.

யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !

தன்னம்பிக்கை





தன்னம்பிக்கை
"நீ மட்டும், நடந்து போனால்!...
யாரும் உன்னை திரும்பி,
பார்ப்பதில்லை!.....
'என்னையும்' அழைத்து செல்,
இந்த உலகம் விரைவில்!...
உன்னை திரும்பி பார்க்கும்"....

எழுதியவர் :மு.இளந்தமிழன்

கவிஞர் வைரமுத்துவின் கவிதை - சிரிப்பு.







சிரிப்பு

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

* * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

* * * * *


காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ�தி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்��றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!

ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!

பா.விஜய்

கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!

பா.விஜய்

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கிவழுக்குது
மல்லிகைப் பூவும் என்மனசும்.
கம்பெனி சைக்கிளில்
போகும் உன்னை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்து விட்டு
வரக்கூடாதா?

பா.விஜய்

காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!

நா.முத்துக்குமார்

காதலித்து பார்!- வைரமுத்து-

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

***

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

***

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!



வைரமுத்துவின் கவிதைகள்

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!